செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: புதுவையில் நாளை வாக்குப்பதிவு - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

Published On 2016-05-15 09:50 IST   |   Update On 2016-05-15 09:50:00 IST
புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
புதுச்சேரி :

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. புதுவை சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22–ந் தேதி தொடங்கியது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மே 2–ந் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா, தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ்ஜவடேகர், பியூஸ்கோயல் உட்பட பல தலைவர்கள் புதுவைக்கு வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

கோடை வெயிலையும் தாண்டி அனல் பறக்கும் பிரசாரம் கடந்த 15 நாட்களாக நடந்தது. இந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

புதுவையில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 47ஆயிரத்து 444. பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 94 ஆயிரத்து 412. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 79.

புதுவையில் 30 தொகுதிகளின் வாக்குப்பதிவுக்காக 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென தனியாக 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் 5 ஆயிரத்து 382 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவுதற்கு ஆயிரத்து 176 மாணவ தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் துறை அளித்த பூத் சிலிப் அல்லது தேர்தல் துறை அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு எந்திரங்கள், தேர்தல் உபகரணங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் 100 மீட்டர் தூரத்திற்கு செல்போன் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் துறை அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் கருதி வாக்காளர்களுக்கு குடிநீர், தேவையான இடங்களில் பந்தல் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு வாக்களிக்க வாருங்கள் என மேகதூத் அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியில் வரிசை உள்ளதா? என கண்டறிய சிறப்பு செல்போன் அப்ளிகேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்கென 30 கம்பெனி துணை ராணுவப்படையின் புதுவைக்கு வந்துள்ளனர்.

இந்த படையினர் அனைத்து வாக்குச் சாடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 148 பதட்டமான வாக்குச் சாடிகளில் 236 பகுதிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக துணை ராணுவப்படையினர், போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் லாஸ்பேட்டை பாலிடெக்னிக் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு இரும்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு வைக்கப்படுகிறது. வருகிற 19–ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Similar News