செய்திகள்

நல்லாட்சி அமைந்திட தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக வரவேண்டும்: இளங்கோவன் பேச்சு

Published On 2016-05-07 22:46 IST   |   Update On 2016-05-07 23:04:00 IST
தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்வராக வரவேண்டும் என பாவூர்சத்திரத்தில் இளங்கோவன் பேசினார்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம் செய்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை இட்டமொழியிலும், ஆதரித்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் பகுதியிலும் இளங்கோவன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: –

கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஜெயலலிதாவை பற்றி தாய்மார்களுக்கு நன்றாக தெரியும். சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது மக்களை அவர் நேரில் கூட சந்திக்கவில்லை. ஆனால் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் கடந்து வந்து ராகுல்காந்தி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

தள்ளாத வயதிலும் கருணாநிதி மக்களை சந்தித்து குறைகள் கேட்டார். இன்றைக்கு குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்க பெற்றோர்கள் சிரமப்படுகிறார்கள். குடும்ப வருமானம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு போதிய வருமானம் கிடைப்பது இல்லை. விலைவாசி உயர்ந்து விட்டது.

தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் முதல் அமைச்சராக வரவேண்டும். அதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். காமராஜர் முதல்அமைச்சராக இருந்த போது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் ஓமந்தூரார் முதல்அமைச்சராக இருந்தபோது ரூ.25 கோடிக்குத்தான் பட்ஜெட் போட்டார். அவர் மது விலக்கையும் அமல்படுத்தினார். இப்போது ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு தமிழக பட்ஜெட் போடுகிறார்கள். ஆனால், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என ஜெயலலிதா கூறுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வேலை செய்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை முடக்கியவர் ஜெயலலிதா. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு சமத்துவபுரம் தந்தவர் கருணாநிதி. கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசனைப்படி விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. அவர் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News