செய்திகள்

கடலூர் அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து: வீடு எரிந்து ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்

Published On 2016-04-15 20:50 IST   |   Update On 2016-04-15 20:50:00 IST
கடலூர் அருகே கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடு எரிந்து சாம்பலானது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் ரெட்டி சாவடி அருகே உள்ள நாகப்பனூரை சேர்ந்தவர் பாரதி (வயது 40). லாரி டிரைவர். இவரது கூரை வீட்டில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வீடு முழுவதும் கொளுந்து விட்டு எரிந்ததால் யாரும் அருகில் செல்லமுடியவில்லை.

இதனால் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெட்டி சாவடி போலீசார் விசாரித்த போது சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவால் தீ விபத்து நடந்தது தெரிய வந்தது. இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News