செய்திகள்
சிவகங்கையில் வியாபாரியிடம் ரூ.98 ஆயிரம் பறிமுதல்: வாகன சோதனையில் சிக்கியது
வாகன சோதனையின் போது வியாபாரியிடம் ரூ.98 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை– மதுரை சாலையில் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் கருப்பையா தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து வந்த ஒரு வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். அதில் தர்மபுரியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் வந்தார். வெள்ளைப் பூசணிக்காய் வியாபாரியான இவர், ராமநாதபுரத்தில் பூச்சணிக்காய் இறக்கி வருவதாக தெரிவித்தார்.
அவரிடம் ரூ,98 ஆயிரம் இருப்பதாக பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர். அது, காய்கள் விற்றதற்கான வசூல் தொகை என ஜெயப்பிரகாஷ் கூறியபோதும், அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை என கூறி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.