பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் காயம்
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே மாளிகை கோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 79). இவர் பெண்ணாடத்துக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
மாளிகை கோட்டம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது குடிபோதையில் விழுந்து காயம் அடைந்த காரையூரை சேர்ந்த மோகன் (33) என்பவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த பாலகிருஷ்ணன் (31) மற்றும் கணேசன் (30) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராகவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ராகவன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பாலகிருஷ்ணனையும், ஏற்கனவே காயம் அடைந்து இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோகனையும் பிடித்து வைத்து கொண்டனர். ஆனால் காயம் இருந்ததாலும், அந்த கும்பலிடம் இருந்து கணேசன் நைசாக தப்பி ஓடிவிட்டார். எனினும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் பறித்து வைத்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் மோகனையும், பாலகிருஷ்ணனையும் மீட்டு அவர்களை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.