செய்திகள்
த.மா.கா. பிரமுகரை காரில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேரை பிடித்து விசாரணை
பண்ருட்டியில் த.மா.கா. பிரமுகரை காரில் கடத்தி பணம் பறித்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). அண்ணாகிராமம் வட்டார த.மா.கா. துணைத்தலைவர். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சண்முகம் பண்ருட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற போது, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் சண்முகத்தை கடத்தி சென்றது. மேலும் அவரை மிரட்டி ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டு சண்முகத்தை விடுவித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுபற்றி பண்ருட்டி போலீசில் சண்முகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர், மோகன், கனகசபை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.