உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு முயல்-கீரி குட்டிகளை வேட்டையாடிய 20 பேர் கைது

Published On 2023-02-23 12:06 IST   |   Update On 2023-02-23 12:06:00 IST
  • 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.
  • பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விருதுநகர்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பாரிவேட்டை நடைபெறும்.

அதன்படி சம்பவத்தன்று மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 120 பேர் பாரி வேட்டைக்கு புறப்பட்டனர். லாரி-கார்களில் சென்ற அவர்கள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வனப்பகுதியில் 5 வேட்டை நாய்களுடன் வேட்டையாடினர்.

இதில் 5 கீரிப்பிள்ளைகள், 30 முயல்கள், கவுதாரிகள் ஆகியவற்றை வேட்டையாடி பிடித்த கிராமத்தினர் பின்னர் லாரிகளில் ஊருக்கு புறப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு லாரிகளில் சென்ற 120 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட கீரிகள், முயல்கள் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து பிடிபட்ட அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வனச்சரக அலுவலர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவில் திருவிழாவுக்காக விலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த தங்கராஜ், செல்வம், நடுவிலான், அழகர்சாமி, சின்னப்பொண்ணு, நாகராஜ் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News