பணத்தை திருடிய 2 பெண்களை படத்தில் காணலாம்.
ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் சிக்கினர்
- ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க பஸ்சில் இடம் தருமாறு கேட்டார்.
- பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.
ராயக்கோட்டை,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அப்பு முதலியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது42).
பெங்களூருவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தனது மகள் வயிற்று வலிக்கு சிகிச்சை அளிக்க தனது முதலாளியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மனைவி மற்றும் மகளுடன் தனியார் பஸ்சில் நேற்று ஊருக்கு சென்றார்.
சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் வந்த போது 2 பெண்கள் குழந்தைகளுடன் பஸ்சில் ஏறினர். அதில் ஒரு பெண் தனது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். அதனால் இடம் தருமாறு சண்முகத்திடம் கேட்டார். அவர் எழுந்து இடம் கொடுத்தார்.
ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே பஸ் வந்த போது சண்முகத்தின் மனைவியிடம் குழந்தையை கொடுத்து விட்டு பேச்சு கொடுப்பது போல் நடித்த அந்த பெண், சண்முகம் மனைவி வைத்திருந்த பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார்.
இதை பார்த்த சண்முகம் பயணிகள் உதவியுடன் 2 பெண்களையும் பிடித்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், உடையார்பட்டி முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா மனைவி பாரதி (27), அயோத்திப்பட்டணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் மனைவி பிரியா (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவர் மீதும் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ20 ஆயிரம் மீட்கப்பட்டது.