உள்ளூர் செய்திகள்

2 ரவுடிகள் வெட்டிக்கொலை: கோர்ட்டில் சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் மனுதாக்கல்

Published On 2023-06-21 07:40 GMT   |   Update On 2023-06-21 07:40 GMT
  • கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
  • முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம்:

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். 

இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்தனர்.   சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் இருந்து அலுவலர் சார்ந்த தகவல் கடந்த 16-ந்தேதி வானூர் போலீசாருக்கு வந்தது. உடனடியாக வானூர் போலீசார் சென்னைக்கு விரைந்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முகிலன் மற்றும் 5 பேரை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்து முகிலனிடம் வானூர் போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது.

Tags:    

Similar News