உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் பஸ் நிலையத்தில் 2 பேர் மயக்கம்- காட்சி பொருளான தண்ணீர் தொட்டியால் பயணிகள் தவிப்பு

Published On 2023-06-01 08:03 GMT   |   Update On 2023-06-01 08:03 GMT
  • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News