இளம்பெண்ணுடன் பழகுவதில் 2 சிறுவர்கள் போட்டி: நடுரோட்டில் மோதல்- தடுக்கச் சென்றவருக்கு கத்திக்குத்து
- அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
- ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் அந்த இளம்பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 சிறுவர்களும் இளம்பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தனர். இதன் காரணமாக சிறுவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று 17 வயது சிறுவன், 16 வயது சிறுவனை தொடர்பு கொண்டு இளம்பெண்ணுடன் பழகுவது குறித்து பேச வேண்டும் என அழைத்தார். இதனையடுத்து 16 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதிக்கு சென்றார்.
அங்கு 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது சிறுவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் சர்ச் வீதியை சேர்ந்த பாலசுந்தர மூர்த்தி (வயது 22) என்பவர் தடுக்க சென்றார்.
அப்போது சிறுவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பாலசுந்தர மூர்த்தியின் கையில் குத்தினர். இதில் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாலசுந்தர மூர்த்தியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர்.