கைது செய்யப்பட்ட பெண் சாமியார் கீதா, வேல்முருகன்
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது
- ஆத்திரம் கொண்ட பெண் சாமியார் போலீஸ் நிலையத்தில் உள்ளிருந்து திடீரென எழுந்து வெளியே நின்று கொண்டிருந்த பூபாலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
- தடுக்க வந்த போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை, வேல்முருகன் தாக்கியுள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (வயது21). இவர் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு ஓமலூர் பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதாக கூறி சென்ற பார்த்திபன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பார்த்த நிலையில் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் சக்தி கோவிலில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே குப்புசாமி அங்கு உறவினர்களுடன் விரைந்து சென்றார்.
அங்கு ஓம் சக்தி கோவிலின் சாமியாராக இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், கருவட்டபாறையை சேர்ந்த கீதா (37) என்பவரை அணுகி மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் கோவிலில் இருந்த மகன் வீட்டிற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குப்புசாமி போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் மகனை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு சென்ற போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் காவலர்கள் பார்த்திபனை மீட்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு சாமியார் கீதா அவருடன் காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (21) உள்ளிட்டோர் வந்தனர்.
அதேபோல் குப்புசாமி சாந்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவரை அழைத்து வந்தார். இந்நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்த பூபாலன் பெண் சாமியார் கீதாவை பார்த்து, மகனை பெற்றோருடன் ஒப்படைத்து விட வேண்டியது தானே என வினவியுள்ளார்.
இதனால் ஆத்திரம் கொண்ட பெண் சாமியார் போலீஸ் நிலையத்தில் உள்ளிருந்து திடீரென எழுந்து வெளியே நின்று கொண்டிருந்த பூபாலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
அப்போது அவர்களை தடுக்க வந்த போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரை, வேல்முருகன் தாக்கியுள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து வேல்முருகன் மற்றும் பெண் சாமியார் கீதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தால் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.