உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் விதிகளை மீறி ஆட்டோக்களில் 15 பேர் பயணம்

Published On 2023-03-22 15:16 IST   |   Update On 2023-03-22 15:16:00 IST
  • சாதாரண ஆட்டோக்களில் ஷேர் ஆட்டோக்களை போன்று பயணிகளை ஏற்றி செல்கிறார்கள்.
  • பல முறை புகார் கொடுத்தும் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாலக்கோடு,  

தருமபுரி மாவட்டத்தில் வளரும் நகரங்களில் ஒன்றான பாலக்கோட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தனியார் மற்றும் அரசு பேருந்து என தினதோறும் சுமார் 200 பேருந்துகளும், நகர மற்றும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் ஆட்டோக்களில் சுமார் 15 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர்.

சிலர் சரக்கு வாகனங்களைப் போன்று தக்காளி, காய்கறி, சிமெண்ட், பூசா மூட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்லுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்களால் பேருந்து ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் அதிகளவு ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதில் பாதி மட்டுமே ஷேர் ஆட்டோக்கள் அதில் 10 பேர் பயணம் செய்யலாம். ஆனால் விதிகளை மீறி சாதாரண ஆட்டோக்களில் 15 பேர் பயணம் செய்கிறார்கள். ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். ஒரு ஆட்டோவில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அரசின் விதிமுறைகள். ஆனால் விதிமுறைகளை மீறி ஆட்டோ டிரைவர்கள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் அதிகம் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

தருமபுரி நகரில் காலை, மாலை நேரங்களில் சாதாரண ஆட்டோக்களில் ஷேர் ஆட்டோக்களை போன்று பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இது பற்றி பல முறை புகார் கொடுத்தும் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பெரிய அளவில் விபத்துக்கள் நடக்கும் முன் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

மேலும் தருமபுரி நகரில் எஸ்.வி. சாலையில் பள்ளி மாணவர்களை அதிகளவு ஏற்றி கொண்டு டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்கி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து அதிகாரிகள் காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Similar News