உள்ளூர் செய்திகள்

தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்த 11 கடைக்காரர்கள் கைது

Published On 2022-06-17 08:36 IST   |   Update On 2022-06-17 08:36:00 IST
  • சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 23 கஞ்சா வழக்குகளும், 86 குட்கா வழக்குகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  • பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவகங்கை:

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் ஒரே நாளில் காரைக்குடியில் உள்ள கடைகளிலும் சிவகங்கை மற்றும் தேவகோட்டை கடைகளிலும் திருப்பத்தூர் பகுதியில் ஒரு கடையிலும் சேர்த்து மாவட்டத்தில் 18 கடைகளில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் தேவகோட்டையில் ஒரு கடையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல சிவகங்கை பஸ் நிலைய பகுதியில் ஒரு கடையை உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி பூட்டி சீல் வைத்தார்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 23 கஞ்சா வழக்குகளும், 86 குட்கா வழக்குகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில் 139 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு கிடங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 30 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு உள்ளன. இதுபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதை பொருட்கள் விற்பனை மூலம் அவர்கள் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும் அத்துடன் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News