உள்ளூர் செய்திகள்

மர்மமான முறையில் இறந்த மாதவன்

உத்தமபாளையத்தில் மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு

Published On 2022-06-21 04:59 GMT   |   Update On 2022-06-21 04:59 GMT
  • மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்தவர் ஸ்ரீபன். டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மாதவன்(16). இவர் ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 18-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாதவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீபன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் மாயமான மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கல்லறை தோட்டம் பின்புறம் உள்ள கிணற்றின் மேல் மாதவன் அணிந்திருந்த செருப்பு மற்றும் டாலர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த கிணற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மின்மோட்டார் மூலம் சுமார் 4 மணிநேரம் தண்ணீரை வெளியேற்றினர். அதன்பின்னர் கிணற்றுக்குள் தேடியபோது மாதவன் உடல் சடலமாக கிடந்தது. அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கிணற்றில் தானாக விழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாதவனின் நண்பர்கள் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News