உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ் தேர்வில் மத்தூர் விவசாயி மகள் தேர்ச்சி பெற்று சாதனை

Published On 2023-05-24 15:10 IST   |   Update On 2023-05-24 15:10:00 IST
  • ஐ.ஏ.எஸ் படிக்கும் ஆர்வத்தினால் சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வந்தார்.
  • தேர்வில் 289- வது நபராக ஹரிணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்தூர், மே.24-

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (விவசாயி). இவருடைய மனைவி கோமதி. இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹரிணி. இவர் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வந்தார்.

பள்ளியில் 10-ம் வகுப்பில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பில் நடைபெற்ற பொது தேர்வில் 1176 மதிப்பெண்ணும் பெற்று பள்ளியில் முதலிடம் வகித்தார்.

இதனையடுத்து கோவை வேளாண்மை கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி அக்ரி படித்து வந்தார். அதன் பிறகு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே வேளாண் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் ஐ.ஏ.எஸ் படிக்கும் ஆர்வத்தினால் சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படித்து வந்தார்.

இதன் பிறகு டெல்லியில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 933 பேர் தேர்வு எழுதினர். அங்கு நடைபெற்ற தேர்வில் 289- வது நபராக ஹரிணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

Similar News