உள்ளூர் செய்திகள்

மாநகர போலீசார் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் காட்சி.

கொலை, கொள்ளையை தடுக்க அதிநவீன டிரோன் கேமரா மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு - திருப்பூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2023-03-27 06:52 GMT   |   Update On 2023-03-27 07:30 GMT
  • காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.
  • காவல் துறையினர் சுமார் 8 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும் பிரத்யேகமாக அதிநவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ட்ரோன் கேமரா வரவழைக்கப்பட்டு அதன் மூலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளை தேர்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பொழுது சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் இந்த கேமராவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு அந்த குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை துல்லியமாக பதிவு செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கும் அதி நவீன தொழில்நுட்பம் உள்ளது.

திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட மாஸ்கோ நகர், பவானி நகர், பாளையக்காடு, எம். எஸ். நகர், உள்ளிட்ட பகுதியில் கஞ்சா , போதை ஊசி மற்றும் போதை மாத்திரை புழக்கத்தில் இருப்பதால் மாநகர போலீசார் கடந்த சில மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்னும் இந்த தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருவதை ரகசிய தகவல் மூலம் அறிந்த காவல் துறையினர் திருப்பூர் வடக்கு உதவி ஆணையர் அனில்குமார், வடக்கு காவல் நிலையம் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார் மற்றும் ராஜசேகர் மற்றும் போலீசார் குழுவாக சென்று ஊத்துக்குளி சாலை பவானி நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியை ட்ரோன் கேமரா மூலம் முதலில் சுற்றி வளைத்தனர்.

குறிப்பாக இந்த டிரோன் மற்ற டிரோன்களை போல் இல்லாமல் டார்ச் லைட் இருந்ததும் அதை கண்ட இளைஞர்கள் தலைதெறிக்க ஓடினர். ஒருசிலர் வந்த இருசக்கர வாகனத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் காட்டுக்குள் தப்பி சென்றனர். ஆனாலும் காவல் துறையினர் விரட்டி சென்று சுமார் 8 பேரையும் இரண்டு இருசக்கர வாகனங்களை பிடித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News