செய்திகள்
படப்பிடிப்பின்போது விபத்து நடைபெற்ற இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

கமல்ஹாசன் படப்பிடிப்பில் விபத்து - ராட்சத கிரேன் சரிந்து உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலி

Published On 2020-02-19 23:31 IST   |   Update On 2020-02-20 02:13:00 IST
கமல்ஹாசன் படப்பிடிப்பில் நேற்று ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை:

இயக்குனர் ‌‌ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசே‌‌ஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Similar News