செய்திகள்

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது

Published On 2017-07-10 20:20 IST   |   Update On 2017-07-10 20:20:00 IST
நடிகை பாவனா கடத்தல் மற்றும் துன்புறுத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கொச்சி:

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அந்த நடிகர் திலீப்பாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.



இந்நிலையில், பாவனா கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கடத்தப்பட்ட பின்பும் பல்சர் சுனில் பல்வேறு நபர்களுடன் போனில் பேசி உள்ளார். அவர் அடிக்கடி பேசிய போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த போன் நம்பர் நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புனிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ஜெயிலில் இருந்தபடி சுனில், திலீப்பின் நண்பரான டைரக்டர் நாதிர்ஷாவை 3 முறை போனில் தொடர்புகொண்டு பேசிய தகவலும் வெளியானது. இதனால் திலீப் மீதான சந்தேகம் வலுத்தது.

இதன் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் இன்று காலை முதல் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் நடிகர் திலீப் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.

Similar News