செய்திகள்
வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் செய்தனர்.

அனுமதி இன்றி 4 பேர் புகுந்தனர்- வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் போராட்டம்

Published On 2021-04-20 04:42 GMT   |   Update On 2021-04-20 04:42 GMT
வானூர் சட்டசபை (தனி) தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சேதராப்பட்டு அரவிந்தர் என்ஜினீயரிங் கல்லூரி 2-வது தளத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டசபை (தனி) தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சேதராப்பட்டு அரவிந்தர் என்ஜினீயரிங் கல்லூரி 2-வது தளத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் 3 ஷிப்ட் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை 6:30 மணியளவில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் சென்றுள்ளனர்.

இதை அறிந்த வானூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் தலைமையில் தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் அனுமதி இன்றி எதற்காக 4 பேரை உள்ளே அனுமதித்தீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மாற்றுவதற்கும், கூடுதல் ஓட்டுகளை பதிவு செய்வதற்கும் இது வழிவகுக்கும்.

ஏதோ முறைகேடு நடந்து இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என சராமரியாக கேள்விகள் எழுப்பி போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டி.எஸ்.பி. அஜய் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அன்று தேர்தல் துறைக்கு பி.எஸ்.என்.எல்., மூலமாக உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில் இணைய இணைப்பு அமைக்க ஆய்வு செய்ய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இதேபோன்று ஓட்டு எண்ணும் மையத்தில் அவர்களது ஏஜென்ட்டுகளும் அதே தகவலை தெரிவித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் வி.சி.க- தி.மு.க., நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News