ஐ.பி.எல்.(IPL)
சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 18:09 IST   |   Update On 2021-03-25 18:18:00 IST
தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், அ.தி.மு.க. சார்பில் கே.பி.கந்தன் போட்டியிடுகிறார்கள்.
திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 5,25,000
2. அசையும் சொத்து- ரூ. 6,17,69,651.56
3. அசையா சொத்து- ரூ. 6,35,63,842

அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.கந்தன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 3,00,000
2. அசையும் சொத்து- ரூ. 1,87,47,294.38
3. அசையா சொத்து- ரூ. 25,15,00,000


தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தொகுதிகளில் சோழிங்கநல்லூர் தொகுதியும் ஒன்றாகும். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் மிகப்பெரிய பணக்கார தொகுதி என்றும் இதை சொல்லலாம். ஏனென்றால் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இந்த தொகுதியில்தான் இருக்கின்றன. பல பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

சோழிங்கநல்லூர் தாம்பரம் தொகுதியின் ஒரு பகுதியில் இருந்தது. 2011-ம் ஆண்டுதான் சோழிங்கநல்லூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் உள்ளகரம், புழுதிவாக்கம் நகராட்சிகளும் பள்ளிக்கரணை, பெருங்குடி சோழிங்கநல்லூர் பேரூராட்சிகளும் உள்ளன.

கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, செம்மஞ்சேரி, காரப்பாக்கம், ஒக்கியம், துரைப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, மடிப்பாக்கம் போன்ற 10 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியோடு இணைந்துள்ளன. 14வது 15 வது மண்டலத்தின் 20 வார்டுகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும் பரங்கிமலை ஒன்றியத்தை சேர்ந்த ஒட்டியம்பாக்கம், வேங்கை வாசல், பெரும்பாக்கம், மேடவாக்கம், நண்மங்கலம், கோவிலம்பாக்கம், 7 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளன.

2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.பி. கந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார். இதன்படி இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தி.மு.க. தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் கணிசமாக உள்ளனர்.



தொகுதியில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீரும் பாதாள சாக்கடை திட்டம் மூலமாக வெளியேற்றப்படாமல் ஏரிகளில் கலக்கின்றது. இதற்கு உரிய தீர்வுகாண வேண்டும் என்று தொகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள ஓ.எம்.ஆர். சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது மற்றொரு முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் இருப்பதால் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்து வந்தாலும், போதுமான இடவசதிகள் இல்லை, அடிப்படை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் மாநகராட்சியில் வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இல்லை. இதனால் கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதற்கு விரைவிர் தீர்வு காண வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். வடநெமிலியில் இருந்து கடல் நீர் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரிவர சீரமைக்காமல் சாலைகள் பழுதடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்ய வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.



தொகுதிகளில் உள்ள 7 ஊராட்சிகளில் துப்புறவு பணிகளை செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. தாம்பரம் மாநகராட்சி உருவாகும் போது இந்த ஊராட்சிகள் அதனோடு இணைக்கப்பட்டு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது காலதாமதம் ஆனதால் 7 ஊராட்சிகளிலும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் மீண்டும் மதுபான கடைகள் இயங்கி வருவது பெண்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறது. அதை அகற்ற வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களின் முக்கியமான விருப்பமாக இருக்கிறது.

தொகுதியில் ஐ.டி. நிறுவனங்களால் பெரும்பாலான பகுதிகள் சிங்கப்பூர் போல காட்சி அளிக்கிறது. ஆனாலும் அடிப்படை வசதிகள் சரியாக இல்லாதது மக்களின் மனக்குறையை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்காளர்கள்

மொத்தம்- 6,94,845
ஆண்கள்- 3,48,262
பெண்கள்- 3,46,476
3-ம் பாலினம்- 107

Similar News