ஐ.பி.எல்.(IPL)
காஞ்சீபுரம் தொகுதி

திமுக- பாமக மோதும் காஞ்சீபுரம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 17:48 IST   |   Update On 2021-03-25 17:48:00 IST
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பெ. மகுஷ்குமார், திமுக சார்பில் எழிலரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபிநாத், நாம் தமிழர் சார்பில் சா. சால்டின், அமமுக சார்பில் என். மனோகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாமக வேட்பாளர் பெ. மகுஷ்குமார் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 90,000
2. அசையும் சொத்து- ரூ. 26,50,000
3. அசையா சொத்து- ரூ. 20,00,00

திமுக வேட்பாளர் எழிலரசன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 9,00,000
2. அசையும் சொத்து- ரூ. 60,83,402.71
3. அசையா சொத்து- ரூ. 53,00,000

தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க தொகுதிகளில் ஒன்றாக திகழ்வது காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி. இது பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்ற பெருமையும், அவர் வெற்றி பெற்ற தொகுதி என்ற பெருமையையும் பெற்றது.



அதுமட்டுமல்ல ஆதிசங்கரர் தோற்றுவித்த சங்கரமடத்தின் தலைமையகம் இங்குதான் உள்ளது. பல புகழ் பெற்ற சங்கராச்சாரியார்கள் இங்கு வாழ்ந்து உள்ளனர்.

இந்த ஊரை தலைமையிடாக கொண்டு பல மன்னர்கள் ஆட்சி புரிந்த பழம்பெருமைகளும் இதற்கு உண்டு. காமாட்சி அம்மன், அத்திவரதர் கோவில், ஏதாம்பரநாதர் கோவில் என பல கோவில்களை கொண்ட நகரமாகவும் காஞ்சீபுரம் திகழ்கிறது.

காஞ்சீபுரம் தொகுதி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 569. இதில் ஆண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 532 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 24 பேர். மூன்றாம் பாலினத்தினர் 13 பேர் உள்ளனர்.



தொகுதியில் காஞ்சீபுரம் நகரம், பாலுசெட்டி சத்திரம், தாமல், பரந்தூர் ஆகியவை பெரிய ஊர்களாகும். இவற்றுடன் ஏராளமான சிறிய கிராமங்கள் தொகுதியில் அடங்கி உள்ளன.

காஞ்சீபுரம் பெருநகராட்சி, காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இதில் உள்ளன. காஞ்சீபுரம் பெரு நகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருக்கின்றன.

இங்கு வன்னியர்கள், முதலியார்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இத்துடன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் குறிப்பிட்ட அளவு இருக்கிறார்கள். இவர்களின் வன்னியர் மற்றும் முதலியார் தலா 30 சதவீதம் பேர் உள்ளனர். ஆதிதிராவிடர் 20 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்கள்தான் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர்.



தேசிய விடுதலைக்கு பிறகு காஞ்சீபுரம் தொகுதியில் 1952-ல் முதல் முறையாக தேர்தல் நடந்தது. அதன்பிறகு இதுவரை 16 தடவை தேர்தல் நடந்துள்ளது. 2005-ம் ஆண்டு மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ், பா.ம.க., கே.எம்.பி.பி. தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

காஞ்சீபுரம் பட்டு துணிக்கு புகழ்பெற்றதாகும். எனவே பட்டு தொடர்பான தொழில்களும், வர்த்தகங்களும் அதிகமாக உள்ளன. இதே போல விவசாயமும் அதிகம் கொண்ட பகுதி ஆகும். பட்டு தொழில் தொடர்பாக இன்னும் கூட தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.



பட்டு சேலை, நெசவு மற்றும் விற்பனைக்கு ஊக்கமும், தேவையான உதவிகளும் அதிகமாக தர வேண்டும். பட்டு கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்த ஒருங்கிணைந்த பட்டுபூங்கா அமைக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

தொகுதி மக்களின் 50 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். ஏரி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயம் உள்ளது. ஏரிகள், நீர்வரத்து கால்வாய்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே அவற்றை தூர்வாற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

நெல்விளைச்சல் பகுதி என்பதால் நிரந்தர கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.



பாலாற்றின் குறுக்கே பெரும்பாக்கம் பகுதியில் பாலம் அமைக்க வேண்டுமென்பது தொகுதி மக்களின் மிக முக்கிய கோரிக்கை ஆகும். மேலும், காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி போதிய வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

காஞ்சீபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். நகரின் போக்குவரத்து நெரிசலை போக்குவதற்கு உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதும் அவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. நகரில் பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.



1952 தெய்வநாயகம் (கே.எம்.பி.பி.)
1957 பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
1962 நடேச முதலியார் (காங்கிரஸ்)
1967 கிருஷ்ணன் (தி.மு.க.)
1971 சி.வி.எம். அண்ணாமலை (தி.மு.க.)
1977 பாலாஜி (அதிமுக)
1980 வெங்கடசுப்பிரமணியன் (அதிமுக)
1984 பாலாஜி (அதிமுக)
1989 முருகேசன் (திமுக)
1991 பட்டாபிராமன் (அதிமுக)
1996 முருகேசன் (திமுக)
2001 எஸ்.எஸ். திருநாவுக்கரசு (அதிமுக)
2005 மைதிலி திருநாவுக்கரசு (அதிமுக- இடைத்தேர்தல்)
2006 கமலாம்பாள் (பாமக)
2011 சோமசுந்தரம் முதலியார் (அதிமுக)
2016 எழிலரசன் (திமுக)

Similar News