ஐ.பி.எல்.(IPL)
செய்யூர் தொகுதி

அதிமுக- விசிக நேருக்குநேர் போட்டியிடும் செய்யூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-25 16:52 IST   |   Update On 2021-03-25 17:12:00 IST
அதிமுக சார்பில் எஸ் கணிதாசம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி பனையூர் பாபு போட்டியிடும் செய்யூர் தொகுதி கண்ணோட்டம்.
வாக்காளர்கள்

மொத்தம்- 2,26,346
ஆண்கள்- 1,11,270
பெண்கள்- 1,15,019
3-ம் பாலினம்- 57

அதிமுக வேட்பாளர் எஸ் கணிதாசம்பத் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 1,52,500
2. அசையும் சொத்து- ரூ. 81,92,651
3. அசையா சொத்து- ரூ. 65,65,000

விசிக வேட்பாளர் பனையூர் பாபு சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 20,000
2. அசையும் சொத்து- ரூ. 3,67,70,852
3. அசையா சொத்து- ரூ. இல்லை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் செய்யூர் தனி தொகுதியாக உள்ளது. முழுவதிலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமங்கள் பலவும் செய்யூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.

இத்தொகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கடபாக்கத்தில் கிழக்கு கடற்கரை ஒட்டி உள்ள பழங்கால ஆலம்பரை கோட்டை, முதலியார் குப்பத்தில் உள்ள அரசின் படகு குழாம் கல்பாக்கம் அனுமின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளன.

மதுராந்தகம் பொதுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட இலத்தூர் ஒன்றியம், அச்சிறுபாக்கம் தொகுதியிலிருந்து நீக்கப்பட்ட சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 46 கிராமங்களை உள்ளடக்கி செய்யூர் (தனி) சட்டமன்ற தொகுதி 2011-ல் உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில் லத்தூர் ஒன்றியத்திலுள்ள 41 ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகள், இடைக்கழி நாடு பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகள், திருக் கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.



2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ். ராஜி முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர், 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர். ஆர்.டி. அரசு, அ.தி.மு.க. வேட்பாளரை விட 304 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து சட்டமன்ற உறுப்பினரானார்.

இத்தொகுதியில் வன்னியர் 25 சதவீதமும், ஆதிதிரா விடர்கள் 30 சதவீதமும், மற்ற சமுதாயத்தினர் 30 சதவீதமும், முஸ்லிம் கள் 10 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 5 சதவீதமும் உள்ளனர். தொகுதியின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில் ஆகியவையாகும்.

தொகுதியின் தலைமையிடமாக இருக்கக்கூடிய செய்யூர் ஊராட்சி மன்றமாக உள்ளது. செய்யூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது செய்யூர் தாலுகா உருவானதில் இருந்து 20 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது. செய்யூரில் தாலுகா அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து தரப்பிலான சிறு மற்றும் பெரு வணிக கடைகள் உள்ளன.

தினசரி செய்யூருக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். ஆனால், தொகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செய்யூர் வருவதற்கு போதிய பஸ் வசதிகள் இல்லை. 
பெரும்பான்மையான கிராமங்களில் விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் செய்யூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் எல்லை அம்மன் கோயில் வரை உள்ள உப்பளம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி பிற்பகுதியில் இருந்து ஜூன் மாதம் வரை உப்பு உற்பத்தி தொழில் நடைபெறும். உப்பு உற்பத்தி தொழிலுக்கு அரசின் சார்பாக மீதமுள்ள 6 மாத காலங்களில் உப்பு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் உப்பு தொழிலாளிகளுக்கு போதிய நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை என்பது தான் தொகுதியின் நீண்டகால பிரச்சினையாக உள்ளது.

இத்தொகுதியில் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. புதிதாக தொழிற்சாலை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். தொழிற்சாலைகள் வந்தால் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு பெருகும். செய்யூர் அனல் மின் நிலையம்(4000 மெகாவாட்) திட்டம் தீட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, முழுவதுமாக அனல் மின்நிலையம் இயங்க முழு வீச்சில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தொகுதி முழுக்க கிராமங்களை உள்ளடக்கியது. கிராமங்களுக்குள் செல்லும் சாலைகள் பெரும்பாலும் குண்டு குழியுமாக உள்ளது. சாலைகளை செப்பனிட்டு புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும் என்பதே தொகுதி மக்களின் கோரிக்கை.



தொகுதியிலுள்ள செய்யூர், பவுஞ்சூர், சூனாம்பேடு, கயப்பாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட பெரிய கிராமங்களில் மட்டும் சுகாதார நிலையங்கள் உள்ளன.நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சிறிய கிராமங்களிலும் துணை சுகாதார நிலையங்களை நிறுவ வேண்டும்.

தொகுதியில் உள்ள ஏரி பாசனத்தால் பயன்பெறும் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது அவற்றை அகற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. மேல்மருவத்தூரில் 2 ஏரிகள் முழுவதுமாக தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவற்றை மீட்டு ஏரியில் நீர் சேமித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

செய்யூர் தொகுதியில் இப்போது அ.தி.மு.க. சார்பில் கனிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2016 தேர்தல் விவரம்:-

ஆர்.டி.அரசு (தி.மு.க.)- 63446
முனுசாமி (அ.தி.மு.க.)- 63142
எழில் கரோலின் (விடுதலை சிறுத்தைகள்)- 17927
சடையப்பன் (பா.ம.க.)- 17892
சம்பத் (பா.ஜ.க.)- 1559
தசரதன் (நாம் தமிழர்)- 919
முனுசாமி (சுயேட்சை)- 803
ரமேஷ் (பகுஜன் சமாஜ்)- 722
நோட்டா-1825

Similar News