செய்திகள்
ப.சிதம்பரம்

தேர்தலையே திருடும் கட்சி பா.ஜனதா- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2021-03-21 09:49 GMT   |   Update On 2021-03-21 09:49 GMT
பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பா.ஜனதா, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது என்று ப சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

காரைக்குடி:

காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற திசையை நோக்கி அனைவரும் பயணிக்கின்றனர். நமது லட்சியமும் ஆட்சி மாற்றம்தான். 10 ஆண்டுகால அவலத்தை முழுமையாக உடைதெறிய வேண்டும். இந்த சரித்திர நிகழ்வை படைக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

தற்போது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழ்மொழிக்கும் பேராபத்து ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்க விரும்புகிறேன்.

பேராபத்தை ஏற்படுத்தும் நச்சுச்செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேர்தலையே திருடும் கட்சி பா.ஜனதா கட்சி. இதனை உயர்ந்த கலையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பா.ஜனதா, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது. அ.தி.மு.க. தலைமை ஆட்சியையும், கட்சியையும் அவர்களிடம் அடமானம் வைக்கிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பல்வேறு அவசர அறிவிப்புகளை வெளியிட்டார். வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதிபெற வேண்டும். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்.

பா.ஜனதா இந்துக்களை, முஸ்லிம்களை, கிறிஸ்தவர்ளை வேறுபடுத்தி பிரித்து பார்க்கிறது. என்னை கண்ட துண்டமாக வெட்டிப்போட்டாலும் இதனை நான் ஏற்க மாட்டேன். பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், பெண்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும், சட்ட நீதிமன்றங்களுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பின்மை, தமிழ்மொழியை, தமிழ் இனத்தை பாதுகாக்க வெகுண்டெழுந்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News