ஐ.பி.எல்.(IPL)
எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளின் ஓட்டு தி.மு.க.வுக்கு கிடைக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2021-03-18 15:53 IST   |   Update On 2021-03-18 15:53:00 IST
முக ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை என்று திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

திருவாரூர்:

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அ.தி.மு.க வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தார். விவசாயிகளின் பாதிப்பை உணராமல் அவர்களது நிலங்களை பிடுங்கி தனியாரிடம் ஒப்படைக்க முற்பட்டார்கள். அப்போது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர்.


ஸ்டாலின் விவசாயிகளின் நிலத்தை பறிக்க நினைத்தார். அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த பழனிசாமி. ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் கவலை இல்லை. எனவே, ஸ்டாலினுக்கு விவசாயிகளின் ஓட்டு கூட கிடைக்காது.

2010 காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன்பின், ஜெயலலிதா நீட் தேர்வை தடுக்க கடுமையான முயற்சி எடுத்தார். தற்போது, நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் விருதுகளை வாங்கியுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக, கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதி என்பதால் தொப்பி அணிந்தபடி பேசினார்.

இதேப்போல் பாபநாசம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபிநாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கோதாவரி- காவிரி இணைப்பு நடந்தே தீரும். இந்தியாவிலேயே ஆளுமையில் சிறந்த மாநிலம் தமிழக மாநிலம்தான். குடிமராமத்து திட்டம் மூலம் குளம் ஏரி வாய்க்கால் முழுமையாக அ.தி.மு.க அரசின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

Similar News