ஐ.பி.எல்.(IPL)
உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிட்டது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2021-03-18 02:51 IST   |   Update On 2021-03-18 03:09:00 IST
தமிழக மாணவ-மாணவிகளின் கல்வி உரிமை, லட்சியத்தை மத்திய, மாநில அரசுகள் பறித்து விட்டன என்று வேலூரில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
வேலூர்:

தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து வேலூர் அண்ணாசாலையில் உள்ள தி.மு.க. மாநகர அலுவலகம் அருகே நேற்று திறந்தவேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை பொதுமக்கள் தோற்கடித்தது போன்று, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் விரட்டி அடித்து தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும்.

தமிழக மாணவ-மாணவிகளின் கல்வி உரிமை, லட்சியத்தை மத்திய, மாநில அரசுகள் பறித்து விட்டன. முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ‘நீட்’ தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்களுடைய மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சேர்ந்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் கடந்த 3 ஆண்டில் 15 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். 

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மருத்துவ கல்விக்கு மட்டும் அல்லாமல் நர்சு படிப்புக்கும் நுழைவு தேர்வு கொண்டு வரப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. அரசின் புதிய கல்வி கொள்கையில் 3, 5-ம் வகுப்புக்கும் நுழைவுத்தேர்வு அறிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துவிட்டது. மோடியை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தைரியமான தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. கடந்த ஆட்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. உங்களிடம் உரிமையோடு கேட்கிறேன். கருணாநிதி பேரனாகவும், மு.க.ஸ்டாலின் மகனாகவும் கேட்கிறேன். இந்த தேர்தலில் தி.மு.க.விற்கு அமோக ஆதரவு தாருங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News