ஐ.பி.எல்.(IPL)
ஒரே சுவரில் உதயசூரியன்-இரட்டை இலை சின்னங்கள்

கருத்து மோதல்களை மறந்து நாகரீக அரசியலுக்கு வழிகாட்டும் விராலிமலை

Published On 2021-03-17 16:42 IST   |   Update On 2021-03-17 16:42:00 IST
விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.


ஜனநாயக நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்துவிட்டாலே எதிர்பார்ப்புகளுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது. கட்சி ரீதியாக கருத்து மோதல்கள் இருந்தாலும் அதில் ஆரோக்கியம் அதிகம் கலந்திருக்க வேண்டும் என்பது முன்னோர் மற்றும் மூத்த தலைவர்களின் ரத்தத்தில் ஊறியதாக இருந்தது. அதனை இன்றளவும் கடைபிடிக்கும் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன.

இருவேறு வேட்பாளர்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொள்வதும் இருவரும் தங்களுக்கு வாக்கு கேட்பதும், வெற்றிபெற வாழ்த்துகள் கூறிக்கொள்வது போன்ற ஆரோக்கியமான அரசியல் சந்திப்புகளும் நடந்து வருவது பெருமைக் குரியது. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை தி.மு.க. வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரும் பிரசாரத்தின்போது நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் சால்வை அணிவித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கொண்டனர்.

இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் வேட்பாளர்களின் சின்னங்களை சுவரில் வரைய தொண்டர்கள் போட்டிப் போட்டு சுவர்களைப் பிடித்து எழுதுவதும் வழக்கமானதுதான். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்காக தொகுதி முழுவதும் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்கள் தனித்தனி சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

ஆனால் விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் ஒரே இடத்தில் பிறந்ததுதானே என்கிறார்கள். இது வாக்காளர்கள் மத்தியில் அரசியல் நாகரீகம் குறித்து பேச வைக்கிறது.

Similar News