ஐ.பி.எல்.(IPL)
திருமயம் தொகுதி

அதிமுக- திமுக நேருக்குநேர் மோதும் திருமயம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-15 11:58 IST   |   Update On 2021-03-15 11:59:00 IST
திமுக சார்பில் ஏற்கனவே 216-ல் வெற்றி பெற்ற ரகுபதிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் பி.கே. வைரமுத்து களம் காண்கிறார்.
திருமயம் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் தலைசிறந்த ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. திருமயத்தில் சிவன், பெருமாள் குடைவரை கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவில்களும் பல்லவ மன்னர்களால் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளன.

கோவிலில் ஒரே கல்லில் 21 அடி நீள பெருமாள் சிலை அனந்த சயன நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பிரசித்தி பெற்றது. பிரசித்தி பெற்ற பழமையான கோவில்கள், கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.


திமுக வேட்பாளர் ரகுபதி, அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து

மேலும் இப்பகுதி சோழ, பாண்டிய நாடுகளை பிரிக்கும் எல்லையாக இருந்து உள்ளது. திருமயத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் ஊமைத்துரை தலைமறைவாக தங்கி இருந்ததால், இக்கோட்டை ஊமைத்துரை கோட்டை என்று அழைக்கப்படுகிறது.



திருமயம் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊராகும். திருமயத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுபாவா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த தர்காவில் இந்து, முஸ்லீம் என மத பேதமின்றி அனைவரும் வழிபடுகின்றனர். இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1957-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து வரும் இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர் இனத்தவர் அதிகமாக வசித்து வருகிறார்கள். மேலும் ஆதிதிராவிடர், நகரத்தார் உள்பட பல்வேறு இன மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள்.



திருமயம் சட்டமன்ற தொகுதி சிவகங்கை பாராளுமன்ற தொகுதியோடு சேர்ந்தது. திருமயம் தொகுதியில் 2 தாலுகாக்கள், 3 ஒன்றியங்கள், 2 பேரூராட்சிகள் உள்ளன. இதில் பொன்னமராவதி ஒன்றியத்தில் 1 தாலுகாவும், 42 ஊராட்சிகளும், 1 பேரூராட்சியும் இருக்கின்றன. அரிமளம் ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், பேரூராட்சி ஒன்றும் உள்ளன. திருமயம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன.



தொகுதியில் கடந்த 1957, 1962, 1977, 1980, 1984, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967, 1971, 1989, 2016-ஆம் ஆண்டுகளில் தி.மு.க.வும், 1991, 2001, 2011 தேர்தல்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ். ரகுபதி 766 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் மீண்டும் அவரே களமிறங்குகிறார். அ.தி.மு.க. சார்பில் பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,10,974 பேர், பெண் வாக்காளர்கள் 1,16,167 பேர், இதரர் 3 என மொத்தம் மொத்த வாக்காளர்கள் 2,27,144 பேர் உள்ளனர்.



இந்த தொகுதியில் முத்தரையர், ஆதிதிராவிடர்கள், முக்குலத்தோர் இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். முத்தரையர் இனமக்கள் தங்கள் செல்வாக்கை காண்பிக்கும் வகையில் தேர்தல்களில் தங்கள் இனத்தை சேர்ந்த ஒருவரை சுயேட்சையாக களம் இறக்குவது வழக்கம். இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் முத்தரையர் ஓட்டுகளை பெற கடும் முயற்சி செய்வதும் வழக்கமான நடைமுறையாகும்.

கோரிக்கைகள்

திருமயம் சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது. மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும். இதனால் விவசாயம் தொடர்ந்து நடைபெற கொள்ளிடம் காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.



சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

திருமயத்தில் சிறுவர்களுக்கு பூங்கா அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-




1952- பழனியப்பன் (காங்கிரஸ்)
1957- வி.ராமையா (காங்கிரஸ்)
1962- பொன்னம்பலம் (தி.மு.க.)
1967- பொன்னம்பலம் (தி.மு.க.)
1971- தியாகராஜன் (தி.மு.க. 
1977- சுந்தர்ராஜ் (காங்கிரஸ்)
1980- சுந்தர்ராஜ் (காங்கிரஸ்)
1984- புஷ்பராஜ் (காங்கிரஸ்)
1989- வி.சுப்பையா (தி.மு.க.)
1991- வி.ரகுபதி (அ.தி.மு.க.)
1996- வி.சின்னையா (த.மா.கா.)
2001- ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)
2006- ராம.சுப்புராம் (காங்கிரஸ்)
2011- பி.கே.வைரமுத்து (அ.தி.மு.க.)
2016-  ரகுபதி (தி.மு.க.)

Similar News