ஐ.பி.எல்.(IPL)
மதுராந்தகம் தொகுதி

மல்லை சத்யா- மரகதம் குமாரவேல் மோதும் மதுராந்தகம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-14 18:31 IST   |   Update On 2021-03-14 18:31:00 IST
அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் மல்லை சத்யா மரகதம் குமாரவேலை எதிர்கொள்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் (தனி) தொகுதியும் அடங்கும்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நகர எல்லைப்பகுதியின் முடிவில் உள்ள பாலாற்றங்கரையின் வடக்கு பகுதியில் ஆரம்பித்து மாவட்ட முடிவில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வரை தொகுதி பரந்து, விரிந்து கிடக்கிறது.

மதுராந்தகம் நகரம், பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் தொகுதிக்குள் அடங்கும். மதுராந்தகம் தொகுதி 1952, 1957 ஆகிய இருமுறையும் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்துள்ளது. அதன் பின்னர், 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனித்தொகுதியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதி பொது தொகுதியாக இருந்தது.

அதுவரை தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதற்குப் பிறகுதான் மதுராந்தகம் பொது தொகுதியிலிருந்து தனி தொகுதியாக மாறியது.

அதன்படி, 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தொகுதி சீரமைப்பின்படி அச்சிறுபாக்கம் (தனி) தொகுதி நீக்கப்பட்டது. மதுராந்தகம் பொது தொகுதியில் இருந்த மதுராந்தகம் ஒன்றியம், மதுராந்தகம் நகராட்சி கருங்குழி பேரூராட்சி ஆகியவற்றுடன் அச்சிறுபாக்கம் (தனி) தொகுதியில் இருந்த அச்சிறுபாக்கம் பேரூராட்சி, அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஆகியவை சேர்க்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும்.

மறுசீரமைக்கப்பட்ட மதுராந்தகம் (தனி) தொகுதியாக மாற்றப்பட்ட பின்பு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், 2016-ம் ஆண்டு தேர்தலில் திமுகவும் வெற்றி பெற்றன.

தொகுதியில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, மதுராந்தகம் நகரிலுள்ள வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏரி காத்த ராமர் என்னும் கோதண்டராமர் திருக்கோவில், உலகப் புகழ்பெற்ற பழமையான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், அச்சிறுபாக்கம் தொண்டை நாட்டு 32 சிவஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோவில், அச்சிறுபாக்கம் மழை மலை மாதா கிறிஸ்துவ தேவாலயம், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பல முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளன.

இத்தொகுதியில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 ஊராட்சிகள், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் ஆகியவை உள்ளடக்கியுள்ளது.

2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிதா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன் பின்னர், 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு புகழேந்தி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.


மரகதம் குமாரவேல்- மல்லை சத்யா

இத்தொகுதியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் உள்ள மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என்பது 50 ஆண்டுகாலமாக பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தமிழக அரசு மதுராந்தகம் ஏரியை தூர்வார ரூ.120 கோடி நிதி ஒதுக்கி அறிவித்தது. ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தும் பணி சட்டமன்றத் தேர்தலுக்குப்பின் அமையவுள்ள அரசு பொறுப்பேற்றவுடன் உடனே செய்யப்படுமா? என்பது பொதுமக்களின் கேள்விக்குறியாக உள்ளது.

நகரங்களுக்கு செல்ல போதுமானதாக பஸ் இயக்கப்படவில்லை. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் தொகுதியில் உள்ள மதுராந்தகம், அச்சிறுபாக்கம், கருங்குழி ஆகிய முக்கிய நகரப் பகுதிகளில் போதுமான அளவிற்கு பொது கழிப்பிட வசதி இல்லாத அவல நிலை இன்றும் உள்ளது.

விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால் தொகுதி முழுக்க உற்பத்தி செய்யப்படும் நெல் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திறந்தவெளியில் அமைத்துள்ளதால் மழை, வெயில் காலங்களில் நெல் வீணாகிறது.

ஆகவே, மிகப்பெரிய அளவிலான கூரை அமைத்த கொள்முதல் நிலையங்கள் அமைத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

இந்த தொகுதியில் அ.திமு.க. வேட்பாளராக மரகதம் குமாரவேல் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. மல்லை சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம்- 2,26,346
ஆண்கள்- 1,11,270
பெண்கள்- 1,15,019
3&ம் பாலினம்- 57

Similar News