ஐ.பி.எல்.(IPL)
தாம்பரம் தொகுதி

தாம்பரம் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-07 17:02 IST   |   Update On 2021-03-07 17:02:00 IST
சென்னை நகரின் நுழைவு வாயிலாக உள்ள தொகுதி தாம்பரம் தொகுதி. தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய தொகுதியாக இருந்த தாம்பரம் தொகுதி சீரமைக்கப்பட்ட பிறகு சிறிய தொகுதியாக மாறியது.
தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் பொருளாதார மண்டலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த வளாகத்தில் உள்ளது. நூற்றாண்டுகளை கடந்த சென்னை கிறிஸ்தவ கல்லூரி தாம்பரம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது.

தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் என முக்கிய அரசுத்துறை நிறுவனங்கள் தாம்பரம் தொகுதியில் உள்ளன.



தாம்பரம் விமானப் படைத்தளம், வரலாற்று புகழ்பெற்ற மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய வர்த்தகப் பகுதியான தாம்பரம் மார்க்கெட் உள்ளன. தாம்பரம் தொகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் ஏற்றுமதி வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

தொகுதியில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் புதிய ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஏராளமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடைபெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வெற்றிபெற்றார்.

கோரிக்கைகள்

அதிக அளவு மக்கள் வரும் தாம்பரம் பகுதியில் நிரந்தரமான பஸ் நிலையம் இல்லை. தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் சென்னை மாநகர பகுதிகள் மற்றும் காஞ்சீபுரம், வேலூர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது.

அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ஒரு முறையான பஸ் நிலையம் அமைக்க ஒவ்வொரு தேர்தலிலும் முக்கிய கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தும் இதுவரை தாம்பரத்தில் பஸ் நிலையம் அமைக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.



2 லட்சம் மக்கள் வசிக்கும் தாம்பரம் நகரத்தில் விமானப்படைக்கு சொந்தமான நிலத்தில் பஸ் நிலையம் அமைக்கப்படும் என 20 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நாள்தோறும் தாம்பரம் நகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூர் வரை, படப்பை முதல் மேடவாக்கம் வரை பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தாம்பரத்தில் பஸ் போக்குவரத்தை நம்பியே வந்து செல்கின்றனர்.

தாம்பரம் ரெயில் நிலையம், தாம்பரம் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக பஸ்கள் நிற்கிறது. நிரந்தரமான அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் வேண்டும் என்பதே தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை.



தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தாம்பரம் நகராட்சி, செம்பாக்கம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி, மாடம்பாக்கம் பேரூராட்சி, அகரம் பேரூராட்சி, திருவஞ்சேரி ஊராட்சி, முடிச்சூர் ஊராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன.

தாம்பரத்தில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பாலாற்று குடிநீர் தாம்பரம் நகராட்சி பகுதி மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பாலாற்று குடிநீர் திட்டத்தை கொண்டு வருவோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகள் அளித்தும் இதுவரை அந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.

தாம்பரம் தொகுதி முழுவதும் நிலத்தடி நீர் குடிக்க பயன்படுத்த முடியாத வகையில் உப்புத்தன்மை வாய்ந்ததாக மாறிவிட்டது. பாலாற்று குடிநீரை தாம்பரம் நகராட்சி, சிட்லபாக்கம் பேரூராட்சி மட்டுமல்லாது தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் அந்த திட்டம் இன்னும் முடியவில்லை. தாம்பரம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தும் தார் சாலைகள் அமைக்க முடியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.



கடந்த 2009-ம் ஆண்டு 174 கோடி ரூபாய் செலவில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆட்சிமாற்றம் மற்றும் பணிகள் முறையாக நடக்காததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே நீர்நிலைகள் பாதுகாக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த இடத்திலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாததால் அதிகளவு மழை பெய்தாலும் ஏரி மற்றும் குளங்களில் கழிவு நீர் மட்டுமே தேங்கி உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மழை நீரால் எந்த பயனும் இல்லாமல் போகிறது.

நீர் நிலை ஆதாரங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. தாம்பரம் தொகுதியில் புதிதாக ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்ட நிலையில் மின்னழுத்தம் பல இடங்களில் உள்ளது. இதனால் துணை மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் தொகுதியை பொறுத்த வரை வன்னியர்கள், நாயுடு சமூகத்தினர், ரெட்டியார்கள், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பிராமணர்கள், யாதவர்கள் கணிசமாக உள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா ஆகியோர் போட்டியிட விரும்புகின்றனர்.

தி.மு.க. சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, கல்வியாளர் ஆதிமாறன் ஆகியோர் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோல் பா.ஜ.க. சார்பில் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் களத்தில் உள்ளார்.

மொத்தம்வாக்காளர்கள்- 4,14,118
ஆண்கள்- 2,06,019
பெண்கள்- 2,08,046
3-ம் பாலினம்- 53

இதுவரை வெற்றி நிலவரம்:-



1977- முனு ஆதி (அ.தி.மு.க.)
1980- பம்மல் நல்லதம்பி (தி.மு.க.)
1984- எல்லா ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.)
1989- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
1991- எஸ்.எம்.கிருஷ்ணன் (காங்கிரஸ்)
1996- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
2001- எம்.ஏ.வைத்தியலிங்கம் (தி.மு.க.)
2006- எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)
2011- டி.கே.எம்.சின்னையா (அ.தி.மு.க.)
2016- எஸ்.ஆர். ராஜா (தி.மு.க.)

Similar News