செய்திகள்
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம்: இந்திய வீரர்கள் பத்திரமாக உள்ளதாக சுஷ்மா தகவல்
ரியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ரியோ:
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழாவின் தொடக்க விழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரின் மரக்கானா திடலில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் சைக்கிளிங் போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே, வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பிரேசில் நாட்டிற்கான இந்திய தூதர் தொடர்பில் உள்ளதாக சுஷ்மா கூறியுள்ளார்.
முன்னதாக, ஒலிம்பிக் நடைபெறும் இடங்களில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.