ஊத்தங்கரை தனியார் பள்ளியில் அதிரடி சோதனை: ரூ.3 கோடியே 39 லட்சம்-245 தங்க நாணயங்கள் சிக்கியது
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள சேலம் சாலையில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தேர்தலையொட்டி பணம் பதுக்கி வைத்து உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து ஊத்தங்கரை தனித்தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தலைமையில் சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் இன்று காலை 8 மணிக்கு பள்ளியில் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பணம் 3 கோடியே 39 லட்சம் மற்றும் 245 தங்க நாணயங்கள் சிக்கியது. தொடர்ந்து அந்த பள்ளியில் அதிகாரிகள் சோதனை நடந்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதே நிர்வாகத்துக்கு சொந்தமான காட்டேரியில் உள்ள தனியார் கல்லூரியிலும் பணம் பதுக்கிவைத்து இருப்பதாக புகார் வந்தது. அந்த கல்லூரியிலும் தற்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.