செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் வெளியிடுவோம் - கமல்ஹாசன்

Published On 2018-07-27 11:49 IST   |   Update On 2018-07-27 11:49:00 IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நடந்த தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.

இந்தியாவின் வலிமையே கிராமங்களில்தான். கிராமங்கள் வாழ்ந்தால் நாடு வாழும் என்று சொல்லி உள்ளனர். எனவே கிராமங்கள் நவீனமயமாக வேண்டும்.



கிராமங்கள் வளர்ச்சி பெறும்போதுதான் முன்னேற்றம் உருவாகுகிறது. இதற்கு இந்திய தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியை உதாரணமாக சொல்லலாம். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரும் செல்போன் வாங்கிய பிறகுதான் தொலைத்தொடர்பு துறை உயர் வளர்ச்சியை அடைந்தது.

கிராமங்களின் ஆற்றலை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் தான் கிராமங்களை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் ஆர்வம் காட்டுகிறது.

மக்கள் நீதி மய்யம் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ்ஸ் (கிராமங்கள்) உருவாக்கப்படும். ஸ்மார்ட் கிராமங்கள் உருவானால் மக்கள் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை மாறும்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் விரைவில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும். அதில் கிராமங்கள் மேம்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

கிராமங்கள் உண்மையிலேயே ஸ்மார்ட்டாக மாறினால் மக்கள் இடம் பெயர்வதில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். கிராமத்து மக்கள் நகர் பகுதிகளுக்கு எப்போது செல்ல வேண்டும்? எதற்காக செல்ல வேண்டும்? என்பதை எல்லாம் தாங்களே தீர்மானிப்பார்கள்.

என்னை நான் அரசியலில் மேம்படுத்திக் கொள்ள தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுடன் கலந்து இருக்க ஆசைப்படுகிறேன். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பானவர்கள் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நான் பல்வேறு விதமான பங்களிப்பை அளித்த பிறகு தான் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளேன். எனவே தயவு செய்து என்னையும் அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

அரசியலில் நான் எடுத்து வைத்திருக்கும் அடி மிகவும் ஆபத்தானது என்பதை நான் நன்கு அறிவேன். அரசியலில் நேர்மைக்கு இடமே இல்லை. ஆனால் அரசியலிலும் நான் நேர்மையை ஏற்படுத்த முயல்வேன்.

தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தயவு செய்து அரசியலுக்கு வாருங்கள். நீங்கள் எனது கட்சிக்குதான் வரவேண்டும் என்பதில்லை. அரசியலுக்கு வந்தால் போதும்.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். அரசியலில் உள்ள அழுக்குகளை விரட்ட வேண்டும். அதற்கு நாம் ஒன்று சேர்ந்தால் பெரிய ஆறாக மாறி அந்த அழுக்குகளை அகற்ற முடியும்.

எனக்கு இப்போது 63 வயதாகிறது. என்னிடம் எந்த லட்சியமும் இல்லை. அதுபோன்று எந்த தியாகமும் இல்லை. ஆனால் கடமை இருக்கிறது.

அந்த கடமையின் பலன்களை பார்ப்பதற்கு நான் இல்லாமல் கூட போகலாம். ஆனால் அடுத்த தலைமுறையினர் அந்த கடமையின் பலனை நிச்சயம் அனுபவிக்கும்.

எனவே உங்களுக்கும் அந்த கடமை உள்ளது. அந்த கடமையை நிறைவேற்ற நீங்களும் முன் வந்தால். இந்த மாநிலத்தை சிறப்பான மாநிலமாக மாற்ற முடியும்.

எனது நற்பணி மன்றத்தில் சுமார் 8 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக நற்பணிகளை செய்து வருகிறார்கள். அந்த நற்பணி இயக்கத்தின் மீது மக்கள் நீதி மய்யம் வலுவாக உருவாக் கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த பக்கமும் சாயாத நடுநிலையான கட்சியாகும். இடது பக்கமோ, வலது பக்கமோ நிச்சயம் சாயாது. ஆனால் சாமானிய மக்களின் குரலை பிரதிபலிக்கும் கட்சி யாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிகழும்.

உலக அளவில் குறிப்பாக ஐரோப்பாவில் நடுநிலை கட்சிகள்தான் ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டுமே நடுநிலை கட்சியாக உள்ளது.

மாற்றங்கள் நிச்சயம் வரும். தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் மாற்றங்கள் வரும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News