செய்திகள்

பாராளுமன்றத்துக்கும்-சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது - தா.பாண்டியன்

Published On 2018-07-15 08:37 GMT   |   Update On 2018-07-15 08:37 GMT
பாராளுமன்றத்துக்கும் - சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறியுள்ளார். #SimultaneousElections #Pandian

ஈரோடு:

ஈரோடு, சூரம்பட்டி வலசில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.பின்னர் நிரூபர்களுக்கு தா.பாண்டியன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது.-

தமிழகத்தில் எங்கோ பெய்த மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனால் இன்னும் பல நகரங்கள், கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும்.

பல ஏழை விவசாயிகளை மிரட்டி அவர்களிடம் இருந்து நிலங்களை எடுத்து எட்டு வழி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டம் தேவைதானா?. அரசு இந்த திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பா.ஜனதா.தலைவர் அமித்ஷா தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலம் என்று சொல்லுவது அவர் கண்ணாடி முன்பு அவரே சொல்லி கொள்வது போல் உள்ளது. அவர் மகன் இரண்டு வருடத்தில் 16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி உள்ளார்.

செலவு சிக்கனம் என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. மோடி உலகம் சுற்றும் செலவை குறைந்தாலே செலவை குறைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார்.  #SimultaneousElections #Pandian

Tags:    

Similar News