செய்திகள்

சோனியா-ராகுலுடனான கமல் சந்திப்பு - தி.மு.க. கூட்டணியை பாதிக்காது: திருமாவளவன்

Published On 2018-06-22 10:50 IST   |   Update On 2018-06-22 10:50:00 IST
சோனியா மற்றும் ராகுலுடனான கமல் சந்திப்பால் தி.மு.க. கூட்டணியை பாதிக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #KamalHaasan #RahulGandhi #DMK

சென்னை:

சோனியா-ராகுலை கமல் சந்தித்து பேசியது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பால் தி.மு.க. தோழமை கட்சிக்கு இடையில் உள்ள உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

கமல்ஹாசன் ஏற்கனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமியை சந்தித்து இருக்கிறார்.

கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்பு விழாவிற்கு சென்றபோது சோனியாகாந்தி, மாயாவதி உள்பட பல தலைவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ராகுல்காந்தியையும் சந்தித்து இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒரு தலைவரை இன்னொரு தலைவர் சந்திப்பதால் அந்த சந்திப்பு கூட்டணிக்காக மட்டுமே என்று நாம் யூகிக்க தேவையில்லை.


கமல்ஹாசன், காங்கிரஸ் இடம்பெறும் அணியில் தாமும் இடம்பெற வேண்டும் என்று பேசியிருந்தாலும் அது தி.மு.க.விற்கோ அல்லது அதன் தோழமை கட்சிகளுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

கமலுடனான சந்திப்பு பற்றி ராகுல்காந்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்மூலம் அந்த சந்திப்புக்கு மிக முக்கியத்துவம் ஏற்பட்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிப்பதற்குள் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு மனித உரிமை ஆர்வலர்களை சுற்றுச்சூழல் பாதுகாவலர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால் இயற்கை வளங்களையும், மக்களுக்கான வாழ்வாதாரங்களையும், பெருமளவில் அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணித்து வருகின்றன. இந்த போக்கை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்களின் கருத்தறியாமல் இசைவு இல்லாமல் இந்த திட்டத்தை திணிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. விரைவில் சேலத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #RahulGandhi #DMK

Tags:    

Similar News