செய்திகள்

எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது - தங்க தமிழ்செல்வன்

Published On 2018-06-19 05:21 GMT   |   Update On 2018-06-19 05:21 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது என்று தங்க தமிழ்செல்வன் பேட்டியில் கூறியுள்ளார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

சென்னை:

தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் தன்னுடைய வழக்கை நாளை மறுநாள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதகுறித்து ‘மாலைமலர்’ நிரூபரிடம் அவர் கூறியதாவது:-

நான் எனது தொகுதி மக்களை நேற்று சந்தித்து பேசினேன். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற எம்.எல்.ஏ. இருக்க வேண்டும். அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதியும் தொகுதியில் இல்லாததால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலை உள்ளது.

அதனால் ஐகோர்ட்டில் நடந்துவரும் எனது வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கலாம் என்றேன்.

அதற்கு அங்குள்ள மக்கள் இடைத்தேர்தல் வந்தால் நீங்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றனர்.

என்னை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நான் தேர்தலில் நிற்க சட்ட சிக்கலை உருவாக்குவார்கள் என்றேன். மக்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாளை மறுநாள் (வியாழன்) சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி விமலாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும் மனுவை கொடுக்க உள்ளேன்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

அவர் என்னதான் ஆசை வார்த்தை கூறி அழைத்தாலும் ஒரு ஆள் கூட போக மாட்டார்கள். 18 பேரும் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளோம்.

எனவே எடப்பாடியின் பேச்சு வெற்றுஜம்பம். அவரது எண்ணம் பலிக்காது. நிறைவேறாது. நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஏற்கனவே எங்களை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்தால் வரவேற்கிறோம் என்றால் சட்டத்தை வளைக்க போவதாக சொல்கிறாரா?

அல்லது 3-வது நீதிபதியிடம் எங்களுக்காக பரிந்து பேச போகிறாரா? என்பது தெரியவில்லை. மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நீதி எங்கே போகிறது? நீதியை வளைக்க இவர்கள் துணிந்து விட்டார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதால் நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

Tags:    

Similar News