செய்திகள்

சசிகலா கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக வாக்களித்தோம்: கலைச்செல்வன் எம்.எல்.ஏ.

Published On 2017-10-10 11:07 IST   |   Update On 2017-10-10 11:07:00 IST
சசிகலா கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக வாக்களித்தோம் என்று கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கடலூர்:

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.வான கலைச்செல்வன் அ.தி.மு.க.தினகரன் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்தை சந்தித்து தனது தொகுதியில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து மனுகொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு நோயால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் இறந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது.

12 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பரவும் வரை இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்வதிலே கவனம் செலுத்துகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களை ஏமாற்றி விட்டது.

சசிகலா கூறியதால்தான் நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக வாக்களித்தோம். எனவே அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது அனைத்தும் சரிதான்.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது நானும் அவரை ஆஸ்பத்திரியில் பார்க்கவில்லை.

இந்த அரசு ஆட்சியாளர்கள் மற்றும் சில அமைச்சர்களின் நோக்கம் தவறாக உள்ளது. கட்சியினர் மீது பொய்வழக்கு பதிவு செய்கின்றனர்.

எனது தொகுதியில் 1 கோடிக்கு சாலைபணிகள் திட்டமிடப்பட்டது. தற்போது அந்த பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களது பதவியை பறிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.

இந்த அரசை மக்கள் விரைவில் புறம் தள்ளுவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்கு வருவார்கள். இரட்டை இலை சின்னத்தை முடக்கவேண்டும் எனக்கூறிய பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News