சட்டமன்றத்தை கூட்டி முதல்-அமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கொ.ம.தே.க. ஈஸ்வரன் பேட்டி
ஈரோடு:
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வி ஏற்பட்டதற்கு தமிழக அரசின் மெத்தன போக்கு ஒரு காரணமாக இருந்தாலும் முக்கிய காரணம் பாதிக்கப்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர்களுமே ஆவார்கள்.
ஏனென்றால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று திரண்டு போராடியது போன்று நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடியதால்தான் நாம் அதில் வெற்றி பெற முடிந்தது.
அதே போன்று நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் களத்தில் இறங்கி போராடவில்லை. இதனால் நாம் இந்த வருடம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற முடியாமல் போய் விட்டது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ள எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கு அ.தி.மு.க. அணிகள் இணைப்பே சிறந்த உதாரணம். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஊழல் ஆட்சி என்று ஓ. பன்னீர் செல்வம் ஒரு வாரத்திற்கு முன் சென்னார்.
ஆனால் தற்போது துணை முதல்-அமைச்சர் பதவியில் உள்ளார். ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்ததால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை.
இவர்களால் நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. தமிழ்நாட்டின் நலன் கருதி கவர்னர் இந்த விசயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் தனக்கு 1½ கோடி தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியும், தினகரனும் தங்களுக்கு 1½ கோடி தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்கிறார்கள்.
உண்மையிலேயே தொண்டர்கள் ஆதரவு இவர்களில் யாருக்கு இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள இவர்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.