மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது: இல.கணேசன்
அரியலூர்:
அரியலூரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் மத்திய அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, 2016-17ல் 27 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறைந்த பிரீமியம் செலுத்தி அதிக பயிர்க்காப்பீடு பெறும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பிருந்த நிபந்தனையை தளர்த்தி, தற்போது 33 சதம் பயிர் சேதமடைந்தாலே நஷ்ட ஈடுபெறலாம்.
நாட்டில் உள்ள 82 நிலக்கரி சுரங்கங்களை நேர்மையாக ஏலமிட்டதன் மூலம் ரூ.3லட்சத்து 94 ஆயிரம் கோடி வருவாயை மத்திய அரசு பெற்றுள்ளது. மேலும் நேரடியாக மானியம் வழங்கியதால் ரூ.49.560 கோடி மிச்சமாகியுள்ளது. 7 கோடியே 50 லட்சம் பேருக்கு முத்ரா கடன் திட்டம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. அதே போல தமிழக அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசும் ஒத்துழைக்கிறது.
ஓ.பி.எஸ். அணிக்கு தாவாமலிருக்க கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தனியார் டி.வி.யில் தகவல் வெளியான விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.