செய்திகள்

ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2017-05-24 07:55 IST   |   Update On 2017-05-24 07:55:00 IST
ரஜினிகாந்த் பா.ஜனதா பிடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என மக்கள் அமைதி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவருவது கல்வி தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது. முதலில் கல்வி கூடங்களில் போதிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சி கடந்த ஓராண்டு காலமாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிற ஆட்சியாக தான் நடந்துவருகிறது. ஓராண்டு சாதனை என்று எதையும் கூறமுடியாது. அ.தி.மு.க.வால் சுதந்திரமாக செயல்பட முடியில்லை. பா.ஜ.க தனது கட்டுப்பாட்டிற்குள் அ.தி.மு.க.வின் 2 அணிகளையும் வைத்து உள்ளது. 2 அணிகளும் ஒன்றுசேர வேண்டும். பிளவை பயன்படுத்தி அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. 4 ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும்.



நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால், தமிழக அரசியல் அவருக்கு சாதகமாக அமையும். ஆனால் அவரை தங்களோடு கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால் அவர்களது பிடியில் ரஜினிகாந்த் சிக்காமல் இருக்க வேண்டும். வைகோ ஜாமீனில் வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News