செய்திகள்

செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சி: தா.பாண்டியன் பேட்டி

Published On 2017-05-05 15:46 IST   |   Update On 2017-05-05 15:46:00 IST
தமிழகத்தில் பாரதிய ஜனதா தனது செல்வாக்கை பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறது என்று தா. பாண்டியன் கூறினார்.

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளத்தால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது. அந்த வெள்ள சேதத்துக்கான முழு நிவாரண பணிகள் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. கடந்த வருடம் வர்தா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன. அதற்கும் மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கவில்லை. இந்த வருடம் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைத்து வருகின்றன. இவர்கள் தண்ணீர் பிரச்சினை தீர ஏதாவது திட்டங்கள் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

ஈரோட்டில் கனி ராவுத்தர் குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 44 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் நிரம்பி பசுமையாக இருந்தது. தற்போது அந்த குளத்தில் 14 ஏக்கர்தான் மிஞ்சி உள்ளது. அதிலும் கோரை புற்கள், சாக்கடை நீர் நிறைந்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. அந்த குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன.

நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் நடவடிக்கை இல்லை. அந்த 14 ஏக்கர் குளத்தையாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து அந்த பகுதி மக்கள் தூர் வாரி வருகிறார்கள். ஆனால் அதையும் தடுக்கும் வகையில் காவல் துறையினரை ஏவி தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. மக்களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தற்போதைய முக்கிய பிரச்சினை தொடர்பாக முதல்- அமைச்சரையும், உள்ளாட்சித்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளோம்.

தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி ஒரு வழி தான் நீட் தேர்வு ஆகும். நீட் தேர்வில் உள்ள சிறு விதி முறைகளை மாற்றம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்கள் உரிமைக்காகவும், பொதுமக்கள் தண்ணீருக்காகவும் போராடி வருகிறார்கள். அதேபோல அனைத்து துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் அதை விட்டு விட்டு மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்த அவசரமாக செயல்படுகிறது.


தமிழகத்தில் பாரதிய ஜனதா தனது செல்வாக்கை பயன்படுத்தி காலூன்ற முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News