செய்திகள்

எந்த நேரத்தில் வந்தாலும் தேர்தலை சந்திக்க தி.மு.க தயார்: திருச்சி சிவா பேட்டி

Published On 2017-05-01 04:49 GMT   |   Update On 2017-05-01 04:49 GMT
எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயாராக இருப்பதாக, திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

மதுரை:

மதுரையில் நிகழ்ச்சி ஓன்றில் பங்கேற்பதற்காக வந்த திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

“தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்று பாரதிய ஜனதா பகல் கனவு காண்கிறது. கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு, ஆனால் இவர்கள் தமிழகத்தில் காலூன்றவே முடியாது.

ஏனென்றால் இது பெரியார் விதை போட்ட பூமி. அறிஞர் அண்ணா வளர்த்த களம். நாங்கள் கலைஞர் காட்டிய வழியில், ஸ்டாலினுடன் பயணித்து வருகிறோம்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பொதுமக்களை மதரீதியாக பிரித்து ஆதாயம் தேட முயல்கிறது. அவர்கள் நினைக்கும் அளவுக்கு நாங்கள் கொக்கு அல்ல. அவர்கள் வேட்டைக்காரர்களும் அல்ல.


நாங்களும் பதிலுக்கு பதில் லாவணி பாட விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் அண்ணா அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்.

பொதுமக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டியது மத்திய -மாநில அரசுகளின் கடமை. ஆனால் இவர்கள் அதில் சிறிதும் கவனம் செலுத்துவது இல்லை.

தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க, மத்திய அரசு தவறி விட்டது.

மாநில அரசாங்கம் ஆளுங்கட்சிக்குள் ஒட்டு சேர்ப்பு பணிகளில் ஆர்வம் காட்டுகிறதே தவிர, பொது பிரச்சினைகளில் கவனம் செலுத்துவது இல்லை.

தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வரும். நாங்கள் எந்த நேரத்திலும் களத்தை சந்திக்க தயாராக உள்ளோம்.

தமிழகத்தில் வெகு விரைவில் நடக்கப்போகும் ஆட்சி மாற்றம், பொது மக்களுக்கு நிச்சயமாக விடிவு காலம் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News