செய்திகள்

அ.தி.மு.க அரசு இன்னும் 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

Published On 2017-04-16 16:43 IST   |   Update On 2017-04-16 16:43:00 IST
ஈரோட்டில் ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய செங்கோட்டையன் அ.தி.மு.க அரசு நிச்சயமாக 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும் என்றார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வேளாண்மை உற்பதியாளர்கள் விற்பனை சங்க ரேசன் கடையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி பேசியதாவது:-

தமிழக அரசின் நீண்ட நாள் கனவான ஸ்மார்ட் கார்டு திட்டம் தற்பொழுது நிறைவேறியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த திட்டத்திற்கு வித்திட்டவர் ஆவார்.

இதன்மூலம் எந்த தவறும் நடக்காது. இத்திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ளது. ஸ்மார்ட் கார்டுகள் மூலம் யாரையும் ஏமாற்ற முடியாது, ஏமாறவும் முடியாது.

கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றபொழுது அரசு சார்பில் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தேன். இதன் மூலம் 3½ லட்சம் மாணவ மாணவிகள் தற்பொழுது பயன்பெற்றுள்ளனர். மேலும் 10வது, 12வது படித்த மாணவ- மாணவிகளும் இந்த வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மூலமாக எதிர்காலத்தில் பொறியாளராகவோ, டாக்டராகவோ படிப்பதற்கு இது பேருதவியாக இருக்கும்.

இந்த அரசு இருக்குமா? -இருக்காதா? என நிறைய பேர் தங்களது எண்ணங்களை கூறி வருகிறார்கள். அவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை, அதுபற்றி கவலையில்லை. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, இந்த அரசு நிச்சயமாக 4¼ ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். இது உறுதி.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Similar News