செய்திகள்

பதவி வெறி பிடித்தவர் சசிகலா: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கருத்து

Published On 2017-02-14 10:11 GMT   |   Update On 2017-02-14 10:12 GMT
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு முன்னர் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை இன்று சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ள நிலையில் இது எங்களுக்கு நல்ல நாள் என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார், சசிகலாவை பதவி வெறி பிடித்தவர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியான பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா ஜெயக்குமார் கூறியதாவது:-

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த நாள், எங்களுக்கு நல்ல நாள். சசிகலா பதவி வெறி பிடித்தவர். தனக்கு வேண்டாதவர்கள் ஜெயலலிதாவை நெருங்க முடியாதபடி அவர் ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை விரும்பியதில்லை.

சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பை அளித்துள்ளது. சசிகலா தலைமையேற்பதை விரும்பாத தமிழக மக்களும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஜெயலலிதாவை பதவிக்காகவும், பணத்திற்காகவும் 30 ஆண்டுகளாக ஏமாற்றியவர் தான் சசிகலா. துரோகம் செய்தவர்கள் தற்போது சிறைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா நீக்கியுள்ளது தொடர்பாகவும், ஓ.பன்னீர் செல்வத்தை நீங்கள் ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, கட்சிக்குள் தங்களது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் யாரையும் நீக்கம் செய்வார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிப்பது தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

Similar News