செய்திகள்

ஜல்லிக்கட்டு கலவரத்துக்கு மு.க.ஸ்டாலின் தூண்டுதலே காரணம்: எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2017-02-02 15:28 IST   |   Update On 2017-02-02 15:28:00 IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் மூண்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் தூண்டுதலே காரணம் என எச். ராஜா குற்றம் சாட்டினார்.
சிதம்பரம்:

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சிதம்பரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் மூண்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் தூண்டுதலே காரணம் ஆகும்.

கடந்த 1962-ல் தனி திராவிடம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. அதற்கு திராவிட கட்சிகள் துணை நின்றன. அதேபோல் தற்போது தனி அமைப்புகளையும், மாணவ அமைப்புகளையும் சீமான் தூண்டிவிட்டு தனி தமிழ்நாடு கோரிக்கையை முன் வைக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கெயில்குழாய் திட்டத்துக்கு முன்நின்று தமிழகத்தில் அனுமதி வழங்கியது தி.மு.க.ஆட்சியில் தான்.

இந்த திட்டத்தை மோடி அரசு தடை செய்தது. கடந்த காலங்களில் தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்து எல்லாம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான். ஆனால் தற்போது மோடி அரசு மீது பழி போடுகிறார்கள்.

தமிழக நலனில் அக்கறை உள்ள ஆட்சியாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் விவகாரத்திலும் தொலைநோக்கு சிந்தனையுடன் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Similar News