செய்திகள்

தமிழக கவர்னராக பதவி ஏற்பீர்களா?: கிரண் பெடி பதில்

Published On 2017-01-26 09:56 IST   |   Update On 2017-01-26 09:56:00 IST
தமிழக கவர்னராக பதவி ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கிரண் பெடி கூறினார்.
ஆலந்தூர்:

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண் பெடி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராட்டம் செய்தனர். சென்னையில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போலீசார் சட்டத்துக்குட்பட்டு நடக்க வேண்டும்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பலனும், வெற்றியும் மக்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக வேண்டும் என்றே சில விஷமிகள் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து இருக்கிறார்கள். இது பற்றி டி.ஜி.பி., மனித உரிமை ஆணைய தலைவர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நான் எப்போதும் இருந்தது கிடையாது. சட்டத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று தான் கூறினேன். தமிழ் கலாசாரம், பண்பாட்டை பெரிதும் மதிக்கிறேன். புதுச்சேரி மாநில கவர்னர் மாளிகையில் முதல் முறையாக காளை மாடுகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் நான் ஆற்றவேண்டிய உரையை சபாநாயகர் வாசித்தார். இதற்காக அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

புதுச்சேரியில் கவர்னராக பதவி ஏற்றதும் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு அங்கிருந்த லட்சுமி என்ற யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். தேசிய விலங்குகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த அக்டோபர் மாதத்தில் யானை லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், பராமரிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தது.

அதன் அடிப்படையில் யானை லட்சுமியை பராமரிக்க வேண்டும் என புதுச்சேரி அரசிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டால் ஏற்பீர்களா என அவரிடம் கேட்டதற்கு இது பற்றி நீங்களோ, நானோ முடிவு எடுக்க முடியாது. ஜனாதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Similar News