ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசரசட்டம் கொண்டு வராதது ஏன்?: வைகோ கேள்வி
ஆலந்தூர்:
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
உலகத்தின் கவனத்தை ஈர்த்த மெரினாவின் புரட்சி, தமிழக மக்களின் ஆதரவை பெற்ற கிளர்ச்சி இதுவரை தமிழக வரலாற்றில் நடக்காத ஒன்று.
முன்பெல்லாம் மாணவர்கள் போராடும் போது, அடக்குமுறை, துப்பாக்கிசூடு, தீக்குளிப்பு என்று இருந்தது. இன்று தமிழகம் முழுவதும் யாருடைய தலைமையும் இல்லாமல், எந்த ஒரு அரசியல் கட்சி ஊடுருவல் இல்லாமல் போராட்டம் நடக்கிறது.
கொட்டும் பனியில், கொளுத்தும் வெயிலில் சிறு அசம்பாவிதம கூட இல்லாமல் நடக்கின்ற போரட்டம் பெருமைக் குரியது.
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டி முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் எடுத்த நடவடிக்கைகளை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அவரை நான் மதிக்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசை அவசர சட்டம் இயற்ற சொன்ன பிரதமர் மோடி, ஏன் மத்திய அரசு கொண்டு வரநடவடிக்கை எடுக்கவில்லை.
‘பீட்டா’ என்பது அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு. அது எத்தனையோ பிராணிகளை கொன்ற அமைப்பு. அதனை கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை, முல்லைபெரியாறு விவகாரத்திலும் காவிரி பிரச்சினையில் அந்த மாநிலங்கள் மதித்ததா? இனியும் தமிழர்கள், மாணவர்கள் ஏமாற மாட்டார்கள். நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பீட்டா அமைப்பும், இந்தியாவின் விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வரும் நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் அவசரச் சட்டத்திற்கு தடை விதிக்கவும் கூடும்.
எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர உத்தரவாதம் இல்லை என்பதால் லட்சோப லட்சம் மாணவர்களும், கோடிக் கணக்கான தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டத்தைத் தொடர்வது நியாயமானது.
இதே கருத்துக்களை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் அவசர கவனத்திற்கும் மின்னஞ்சல் கடிதத்தை அனுப்பி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.