விவசாயிகள் பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
கீழ்வேளூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை பயிர்கள் கருகியதால் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 67 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது எனக்கு மிகவும் வேதனை தருகிறது. மனித உயிர்களை பற்றி மட்டுமே எனக்கு தெரியும். பயிர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த ஆய்வின்போதுதான், விவசாயிகள் எவ்வித துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பது தெரிய வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு முறையாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசிடம் இருந்து மாநில பேரிடர் நிவாரண நிதி பெற வேண்டும். மத்திய அரசுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கக்கூடாது என்று எந்தவித உள்நோக்கமும் கிடையாது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து உரிய முறையில் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சினையில் மிகவும் மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பா.ஜ.க.விற்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நிதி செலுத்தவும், அந்தந்த குடும்பங்களின் தொழில் தெரிந்தவர்களுக்கு முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் கடன் பெற்று தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்களால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. டெல்டா மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இரண்டொரு நாட்களில் தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க தேதி கேட்டுள்ளேன். அப்போது இது குறித்து வலியுறுத்துவேன். மேலும், டெல்லியில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் வேதரத்தினம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.