செய்திகள்

கரும்பு விலை டன்னுக்கு ரூ.2850 ஆக உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Published On 2016-12-27 09:23 GMT   |   Update On 2016-12-28 09:47 GMT
கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கரும்பு விலை டன்னுக்கு 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடப்பு கரும்பு பருவத்தில் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைக்கண்ணு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், வேளாண்மைத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சர்க்கரைத் துறை ஆணையர் மகேசன் காசிராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நடப்பு 2016-17 கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,600 ரூபாய் வழங்கி வருகின்றன. அதே போன்று மகாராஷ்டிராவில் பெரும்பாலான ஆலைகள் டன் ஒன்றுக்கு 2,475 ரூபாய் வழங்கி வருகின்றன.

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த ஆண்டு நிர்ணயித்ததைப் போலவே, மாநில அரசு பரிந்துரை விலையாக, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட, 2,850 ரூபாய் என விலை நிர்ணயம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான 2,300 ரூபாய் என்பதற்குப் பதில் தமிழக கரும்பு விவசாயிகள் டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய், அதாவது கூடுதலாக 550 ரூபாய், பெற வழி வகை ஏற்படும்.

கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தவும், சொட்டு நீர்ப் பாசன வசதிகளை கரும்பு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்திடவும், சர்க்கரை ஆலைகளின் லாபத்தில் உரிய பங்கு பெறும் வகையிலும் கரும்பு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்க விவசாயிகள், சர்க்கரை ஆலை பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News