செய்திகள்

மத்திய குழு அடுத்த வாரம் சென்னை வருகை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2016-12-23 12:52 IST   |   Update On 2016-12-23 12:52:00 IST
வார்தா புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு அடுத்த வாரம் சென்னை வர இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோயம்புத்தூர் செல்லும் போது சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வார்தா புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ய அடுத்த வாரம் மத்திய குழு சென்னைக்கு வர இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே சொன்னபடி தமிழகத்திற்கு வேண்டிய அத்தனை ஒத்துழைப்பையும் தருவார். முதல் அமைச்சர் இழப்பிற்கு பின் தமிழகம் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று முழு கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழக மக்களுக்கு எந்தவித பின்னடைவும் இருக்கக் கூடாது என்று வேண்டிய உதவிகளை செய்வார்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு அத்தனை முயற்சியும் எடுத்து வருகிறது. வழக்காடு மன்றத்திலும் மத்திய அரசு தன்னுடைய வாதத்தை வலிமையாக எடுத்து கூறி உள்ளது. விலங்கியல் ஆர்வலர்கள் கூட மத்திய அரசை இதற்காக விமர்சித்து உள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்களை நடத்துவதை விட சட்டரீதியான நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை நடத்த பாரதிய ஜனதா கட்சி ஆர்வமாக உள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க வருகிறது என்ற வாதத்தை நான் கடுமையாக மறுக்கிறேன். பின்வாசல் வழியாக வர வேண்டும் என்றால் ஏன் முன் வாசல் வழியாக வருமான வரித்துறையை அனுப்ப வேண்டும்.

இப்போது தான் மக்களுக்கு நேரடியாக நம்பிக்கை வந்து உள்ளது. நாம் பணத்தை வைத்து இருப்பவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கை மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறை மீது ஏற்பட்டு உள்ளது.

என் பணத்தை எடுக்க நான் வரிசையில் நிற்க வேண்டுமா என மக்களை எதிர்கட்சியினர் ஆவேசபடுத்துகின்றனர்.

இனி எதிர்க்கட்சியினர் யாரும் அரசியல் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News